2.கிறிஸ்தவ வாழ்வின் அடுத்த அத்தியாயம் - SUNDAY 19.10.2025



தலைப்பு :

வாசலின் உள்ளே சபை
என்னும் சுதந்திரம்

(தேவனுக்கு நாம் கீழ்ப்படிவதற்கான அவகாசம்)

முந்தைய பதிவை பார்க்க இங்கே தொடவும்




கிறிஸ்துவிற்குள் பிரியமானவர்களே..!

சென்ற வாரத்தில் நாம் வாசலின் உள்ளே பிரவேசியுங்கள் என்கிற தலைப்பில் சில சத்தியங்களை பார்த்திருந்தோம்.

மனிதன் கீழ்ப்படியாமல் போனபின்பு தேவனுக்கும் நமக்குமான உறவு தடைபட்டது. பரலோகம் நம்மிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

தேவனுக்கும் நமக்குமான உறவின் வாசல் அடைக்கப்பட்டது. அதை நாம் ஆதியாகமத்தில் பார்க்கிறோம்.

ஆதியாகமம் 1:23. ... தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

24.அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய.....

ஆனால், இயேசு கிறிஸ்து நிமித்தம் அந்த உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்துவே நமக்கும் தேவனுக்குமான புதிய வாசலை  உருவாக்குகிறார். அவரே அந்த வாசல். (யோவான் 10:9 நானே வாசல்,.)

அந்த வாசலுக்குள் செல்லும் போது நாம் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் சென்று விடுவோம். நாம் நல்ல மேய்ச்சலை கண்டடைவோம்.

இது வரைக்கும் நாம் சென்ற வாரத்தில் பார்த்தது.

இனி, அந்த வாசலுக்கு அடுத்து, சபை என்னும் மேய்ச்சல் நிலம் நமக்கு கொடுக்கப்படுகிறது. சபைக்கு பின்புதான் பரலோகம் நமக்கு கிடைக்கிறது என்பதை பார்க்க போகிறோம். அந்த சபை ஏன் ஏற்படுத்தப்பட்டது? சபையின் நோக்கம் என்ன?



இயேசுகிறிஸ்து உலகத்திற்கு வந்து நான்கு காரியங்களை நமக்காக செய்தார், நாம் பரலோகம் சென்றடைய வேண்டும் என்பதற்காய் அவற்றை செய்தார். 

1.நமக்கான தண்டனையை நிறைவேற்றும்படி - அவர் பாடுபட்டு மரித்தார்.

2.நம்மை நீதிமான்களுக்கும்படிக்கு, 
நம்மை தேவனோடு சேர்க்கும்படிக்கு - அவர் கீழ்ப்படிந்தார்.

3.நாம் கீழ்ப்படிதலுள்ளவர்கள் ஆகும்படிக்கு - சபையை ஸ்தாபித்தார்.

4.சபையில் நம்மை வழிநடத்தும்படி - சபைக்கு பரிசுத்த ஆவியானவரை  தந்தருளினார்.
சபையில் மேய்ப்பர்களை ஏற்படுத்தினார்.

நாம் இப்போது இயேசு கிறிஸ்து என்னும் வாசலை கடந்து சபைக்குள் செல்ல இருக்கிறோம்.




1.“அவர் நமக்காகத் தண்டனையை ஏற்றார்”


ஏசாயா 53:4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

இங்கு, ஏசாயா தீர்க்கதரிசினால் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகளை கவனிக்கும் போது நாம் இன்றைக்கு செய்கின்ற அனைத்து பாவத்திற்கும் சேர்த்து இயேசு கிறிஸ்து மரித்தார் என்று நினைப்போம்.

இயேசு கிறிஸ்து நமக்காக மரித்ததால்தான், நமக்கான நீதி, பாவ மன்னிப்பு, கிருபை, கிடைத்தது என்று நினைக்கிறோம். ஆனால், அது முழுமை இல்லை.

இயேசு கிறிஸ்து மரித்ததால் ஆதாம் செய்த பாவத்திற்கான தண்டனை, நமக்கு விதிக்கப்பட்ட ஜென்மதண்டனை நம்மை விட்டு நீங்கிற்று.


அதாவது, தேவன் ஆதாமுக்கு - ஆதாமுடைய வம்சமாகிய நமக்கு நியமித்த மரணத்தை இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டார்.

ஆகையால்தான், இயேசு கிறிஸ்துவை வேதம் பிந்தின ஆதாம் என்கிறது. 

I கொரிந்தியர்15 : 45. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
47. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.

இங்கே, முந்தின ஆதாம் மூலம் ஏற்பட்ட தண்டனையை பிந்தின ஆதாம் மூலம் முடித்து வைக்கிறார். 

இங்கே மிக முக்கியமான ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இங்கே தண்டனை முடித்து வைக்கப்பட்டது என்றால், ஆதாம் செய்த பாவத்திற்கான தண்டனை மன்னிக்கப்பட்டதா? என்றால் மன்னிக்கப்படவில்லை. 
தண்டனை தண்டனைதான். 

ஆனால், நமக்கான தண்டனை இயேசு கிறிஸ்துவால் அந்த தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை விட அது இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றப்பட்டது.!!

தண்டனை மன்னிக்கப்படவில்லை.! 

தண்டனை நிறைவேற்றப்பட்டது.! 

நமக்காக அவர் மரித்தார்.!



இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நம் முக்காலத்தின் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று நினைப்பதால்தான், இயேசு கிறிஸ்து நமக்காக, நம்முடைய எல்லா பாவங்களுக்காக பாடுபட்டு விட்டாரே இனி நம்முடைய பாவங்களுக்காக நமக்கு தண்டனை இல்லை என்கிற புது உபதேசங்கள் பெருகிறது.

சிலர், இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டாலே போதும் நமக்கு நரகம் என்பதே இல்லை என்று கூட போதிக்கிறார்கள்.

வெளிப்படுத்தின விசேஷத்தில்  இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்கிறார்,

வெளிப்படுத்தின விசேஷம் 21:12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

அதாவது நம்முடைய பழைய பாவம். அதாவது ஜென்ம பாவம் நம்மை விட்டு நீங்கிற்று. அதற்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், அதற்கு பின்பு நாம் செய்கின்ற பாவங்களுக்கான அல்லது நீதிக்கான பங்கு  நிச்சயம் அவர் வரும்போது எதிரொலிக்கும். 

ஆதாவது இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நம்மிடம் இருந்த பாவத்தின் வேர் பிடுங்கப்பட்டு விட்டது. ஆனால் பாவம் நம்மிடம் இருக்கிறது.

அப்படியானால் புதிய பாவங்களுக்கு மன்னிப்பு இல்லையா என்றால் மன்னிப்பு இருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவினிடத்தில் இருக்கிறது.!

நம்முடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் கீழ்ப்படிந்ததின் மூலம் அவர் பெற்றுக்கொண்டார். 

இனி அவருக்கு கீழ்ப்படிவதுதான் நம்மை நித்தியத்தில் சேர்க்கும்.



2.“அவர் நமக்காக கீழ்ப்படிந்தார் ”

கீழ்ப்படிதல் இல்லாமல் தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்ல முடியாது என்பது நிச்சயம். இயேசு கிறிஸ்துவே கீழ்ப்படிந்துதான் நமக்கான ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்தார்.

பிலிப்பியர் 2:6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.



ரோமர் 5:19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.


இந்த வசனத்தின் மூலம் அதை அறியலாம், 

1.ஏற்கனவே ஆதியில் நாம் கீழ்ப்படியாதற்கான தண்டனை அவர் ஏற்றுக்கொண்டார். அந்த தண்டனை முடிந்தது, 

2.ஆனால், நாம் பின்பு நீதிமான்களாக வேண்டுமல்லவா? நாம் நீதிமான்களாகும்படிக்கு அவர் கீழ்ப்படிந்திருந்தார். 

புரிகிறதா? அவருடைய தண்டனையினால் நாம் விடுவிக்கப்பட்டோம். அவருடைய கீழ்ப்படிதலினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம்.

நாம் ஏற்கனவே கீழ்ப்படியாததற்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். 
நாம் இப்போது  கீழ்ப்படியும் பொருட்டு அவர் ஏற்கனவே கீழ்ப்படிந்தார்.!




பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தில் அதை அழகாக சொல்கிறார்.

ரோமர் 5:18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

பவுல் சொல்லும்போது,  ஆதாமுடைய மீறுதலினால் நமக்கு மரண தீர்ப்பு உண்டானது போல்,  இயேசு கிறிஸ்துவினுடைய நீதியினால் ஜீவனை அளிக்கும் தீர்ப்பு உண்டானது என்கிறார்.

இங்கு நீதி என்பது கீழ்ப்படிதல்தான். நமக்கு இயேசு கிறிஸ்து மரணத்தினால் நீதிமான் என்கிற பட்டம் கிடைக்கவில்லை. இயேசு கிறிஸ்து நமக்காக கீழ்ப்படிந்ததினால் நீதிமான் என்கிற பட்டம் நமக்கு கிடைத்தது. 

நமக்கு பதிலாக கீழ்ப்படிந்து நம்மை நீதிமான்களாக்கிவிட்டுதான்,

பின்பு அவர் நமக்கு பதிலாக தன்னை பாவியாக்கி கொண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டார். 

அதாவது, அவர் தண்டனையை ஏற்று கொள்ளும் முன்பே நாம் நீதிமான்களாக்கப்பட்டோம்.!!!

அதை நாம் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் (கடிதத்தில்) வாசிக்க முடியும்.

2 கொரிந்தியர் 5:21. நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.



நாம் நீதியாகும்படிக்கு,
அவர் பாவியானார்.! பாவியாக்கப்பட்டார்.!

யோசித்து பாருங்கள், இரண்டு பேரை குற்றவாளியாக வைக்கிறார்கள். அதில் ஒருவன் உண்மையான குற்றவாளி, ஒருவர் நீதிமான். இப்போது நீதிமானுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் குற்றவாளியை நீதிமான் என்று தீர்ப்பு எழுதினால்தான் உண்டு. 

அந்த நீதிமான் என்ன செய்கிறார் என்றால். அந்த குற்றவாளியை காப்பாற்றும்  பொருட்டு அந்த குற்றவாளியை நல்லவன் (நீதிமான்) என்று சொல்லிவிட்டு, அந்த குற்றத்தை இவர் ஒப்புக்கொள்கிறார், ஏற்று கொள்கிறார்.

இப்போது உண்மையான குற்றவாளி நீதிமான் என்று விடுவிக்கப்படுவான். நீதிமான் குற்றவாளியாக குற்றத்திற்கான தண்டனையை பெறுவார்.

அதற்கு பின்பு, அந்த குற்றவாளி தன் தலை தப்பியதை நினைத்து மகிழ்ந்து, பின்பு தனக்காக அந்த தண்டனையை ஏற்று கொண்டவரை நினைத்து மனம் வருந்தி, அதற்கு பின்பாவது, தான்  குற்றமற்றவனாக வாழ நினைத்தால் பிழைத்து கொள்ளுவான்.

ஆனால், அதை மறந்து மீண்டும், மீண்டும் குற்றம்செய்தால் இறுதி நியாதீர்ப்பிலிருந்து தப்பித்து கொள்ள மாட்டான். ஏனெனில் இறுதி நியாயதீர்ப்பு செய்கிறவர், இவனுடைய முந்தைய பாவங்களுக்காக இவனுக்காக மரித்தவரே.!

ஆம். இங்கே நமக்கு  இயேசு கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட இந்த கிருபை என்பது கீழ்ப்படிதலுக்கான மாற்று அல்ல. கீழ்ப்படிதலுக்கான அவகாசம்.! 



3.நாம் கீழ்ப்படிதலுள்ளவர்கள் ஆகும்படிக்கு சபையை உருவாக்கினார்.


நமக்காக தண்டனையை ஏற்று கொண்டவர் இப்போது என்ன செய்கிறார் என்றால் முதலில் மனம் திரும்பும் சுவிசேஷத்தை நமக்கு சொல்கிறார்.

சுவிசேஷம் என்பது என்ன? நமக்காக அவர் மரித்தார் என்பதே.!

பின்பு, மனம்திருப்புதலை அவன் ஏற்றுக்கொண்டபின்பு,  அவனை நீதிமானாக்குவதற்காக சபையில் சேர்கிறார். 

நாம் நீதிமான் என்று அழைக்கப்படலாம், ஆனால்,  நாம் உண்மையாக நீதிமானா என்றால் இல்லை.! நம்மை உண்மையாகவே நீதிமானாக மாற்றுவதற்காக அவர் சபை என்னும் பயிற்சி ஸ்தலத்தை / மனம் திரும்பும் கிருபை ஸ்தலத்தை உருவாக்குகிறார்.

இவை அனைத்துமே தேவனோடு மீண்டும் நம்மை சேர்ப்பதற்குத்தான். 

நாம் பரலோகம் செல்வதற்கு எத்தனை ஏற்பாடுகளை இயேசு கிறிஸ்து செய்திருக்கிறார் பார்த்தீர்களா? 

1.இயேசு கிறிஸ்து நமக்கான தண்டனையை ஏற்று கொண்டார், 2.பின்பு நமக்கு கிருபை கிடைக்கும்படிக்கு அவர் கீழ்ப்படிந்தார். 3.பின்பு நாம் கீழ்ப்படிதலுள்ளவார்களாகும் படிக்கு அவர் சபையை ஸ்தாபித்தார். 4.நம்முடைய உதவிக்காக பரிசுத்த ஆவியானவரை நமக்கு தருகிறார்.




இப்போது ஒரு கேள்வி நமக்கு வரலாம். நமக்காக இத்தனையும் செய்ய இவருக்கு என்ன வந்தது.?

நமக்காக அவர் இத்தனையும் செய்வதற்கு அவர் நம்மை படைத்தவர். நாம் அதிகமாய் நினைப்பது பிதா நம்மை படைத்தார் என்று. ஆனால் யோவான் 1 ஆம் அதிகாரத்தில் வாசித்தால்,

யோவான்.1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

இங்கே, தேவனோடிருந்த அவர் என்பது இயேசு கிறிஸ்துதான்.  

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

இயேசு கிறிஸ்துதான் இந்த உலகத்தின் அனைத்தையும் உண்டாக்குகிறார். ஆனால், பிதாவின் சித்தபடி அனைத்தையும் உண்டாக்குகிறார். முக்கியமாக இயேசு கிறிஸ்து நம்மை படைத்தவர். 

அதனால்தான்,  தான் படைத்த மனிதன் தவறிவிட்டான் என்பதை  அறிந்து அவனை மீட்பதற்காக தன்னையே பலியாக கொடுக்க முன்வந்தார்.

நாம் படைத்த படைப்பு, நாம் பெற்ற  பிள்ளைகள் ஒருபோதும் கெட்டுபோக விடமாட்டோம். அவர்கள் கெட்டு விட்டார்கள் என்று அவர்களை கொன்று விட மாட்டோம். எப்படியாவது அவர்களை திருத்த, சரி செய்ய முயற்சிப்போம்.

அதேதான், இயேசு கிறிஸ்துவும் தான் படைத்த படைப்பாகிய மனிதன் கெட்டு, நரகத்தில் அழிந்து போக கூடாது என்று தன்னையே பலியாக தந்து, அவனுக்கு இருந்த தண்டனையை அவர் ஏற்று, அவனை காப்பாற்றி, 

பின்பு அவனை தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிதல் உள்ளவனாக நிறுத்துவதற்காக, சபையை உருவாக்கி, அந்த சபையில் நம்மை சேர்த்து, வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு கற்று கொடுத்து கொண்டிருக்கிறார். 

அதனால்தான், இயேசு கிறிஸ்து சொல்லும்போது ஜெயம்கொள்ளுகிறவன் என்னோடே இருப்பான் என்கிறார். எங்கு ஜெயம் கொள்ளுகிறவன் என்றால் இந்த உலகத்தில் ஜெயம் கொள்ளுகிறவன். 

அப்படியானால் நாம் இங்கு ஜெயம் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது அல்லவா?


வெளி 2:7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

வெளி 2:11. ...ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

வெளி 3:21. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

நாம் ஜெயம் கொள்வதற்காக, நாம் அவருடைய வெற்றி உள்ள படைப்பாக மீண்டும் நாம் அவரோடு ஜொலிப்பதற்காக,

அவர் நம்மை கீழ்ப்படிதலுள்ள ஒருவராக பிதாவினிடத்தில் ஒப்படைப்பதற்காக  நம்மை வாசலின் உள்ளே சபைக்குள் கூட்டி  சேர்க்கிறார்.

ஆகவே, சபை என்பது நாம் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தும் ஸ்தலம் அல்ல. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி கீழ்ப்படித்தலை கற்று கொடுக்கும் இடம். கீழ்ப்படித்தலை கற்று கொள்ளும் இடம்.

இயேசு கிறிஸ்து மனம்திரும்பிய நம்மை சபைக்கு கொண்டு செல்கிறார்.>> 

சபை நம்மை பரலோகத்திற்கு தயார்படுத்துகிறது.>> கொண்டு செல்கிறது.!




யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், 
அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

இங்கே, இயேசு கிறிஸ்து சொல்லும் போது கூட, நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசிக்கும் போதுதான் இரட்சிக்கப்பட முடியும், மேய்ச்சலைக் கண்டடைய  முடியும் என்கிறார்.

அந்த மேய்ச்சலை நாம் எங்கு கண்டடைவது என்றால் அது சபையில்தான். சிந்தித்து பாருங்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து சென்ற பின்பு அவர் முதலாவது உருவாக்கியது சபைதான்.

பெந்தெகொஸ்தே என்னும் நாளில் சபை உருவாக்கப்பட்டது. 

அப்போஸ்தலர் 2:1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்.இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.



இயேசு கிறிஸ்துவின் சொந்த இரத்தத்தால் சம்பாதித்த சபை 

நாம் சபை என்பது தேவனை துதிக்க செல்லும் ஒரு கடமை என்று நினைக்கிறோம். அதுமட்டுமில்லை. அது நம்மை பரலோகத்திற்கு அழைத்து செல்லும் ஒரு ஸ்தலம். அங்கே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

சபையை குறித்து பவுல் சொல்லும்போது, இயேசு கிறிஸ்து தன்னுடைய சொந்த இரத்தத்தினால் சம்பாதித்தது என்கிறார்.

அப்போஸ்தலர் 20:28. ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

சபையை குறித்து பேதுரு சொல்லும்போது,

1 பேதுரு 5:1. உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:

2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,

3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.

4. அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

5. அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.


சபை நமக்கான சுதந்திரம் என்று பேதுரு சொல்கிறார். அந்த சுதந்திரமான சபை தனிப்பட்ட யாரும் உரிமைபாராட்ட கூடியது  அல்ல என்கிறார்.

நம்மை நெறிப்படுத்த, நம்மை பரலோகத்திற்கு தகுதிப்படுத்த இயேசு கிறிஸ்து நமக்கு ஆயத்தம் செய்தது சபைபைபிளில் சபை இயேசு கிறிஸ்துவின் சரீரம் எனப்படுகிறது. 

சபையை நடத்தும் தலைவர்களுக்கு மேய்ப்பர்களுக்கு புத்தி சொல்லும் விதமாய் , சபையை இது என்னுடைய சபை என்று இறுமாப்பாய் ஆளுகிறவர்களாய் இராமல் மந்தைக்கு மாதிரிகளாக இருக்க வேண்டும் என்கிறார். 

இன்று பல சபை தலைவர்கள் இது நான் கட்டியது, நான் எழுப்பியது, என்னால்தான் சபை இருக்கிறது இந்த விசுவாசிகளை நான் ஆதாயப்படுத்தியது, நான் இல்லை என்றால் இந்த விசுவாசிகள் இல்லை என்கிற மனப்பாங்கில் சபையை ஆளுகிறார்கள். சபையில் தன்னையே உயர்த்தி கொள்கிறார்கள்.

இன்னும், அவலட்சணமான ஆதாயத்திற்காக சபையை நடத்த கூடாது என்று பேதுரு சொல்கிறார். இன்று எப்படிப்பட்ட சபைகள் இருக்கிறது.? அந்த சபைகளின் வருமானம் எப்படிப்பட்ட விதமாய் செலவாகிறது.? பல  சபைகளின் காணிக்கை அவர்களின் சொந்த தொழிலுக்கு முதலீடாக மாறுகிறது.

சபை, இயேசு கிறிஸ்து கீழ்ப்படிந்து உருவாக்கிய சபை, அவர் கீழ்ப்படிந்து அவருடைய இரத்தத்தால் சம்பாதித்த சபை, அந்த மந்தையிலிருந்து வருகிற காணிக்கையை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்? இன்னொரு மந்தையை உருவாக்குவதற்காகதான் பயன்படுத்த வேண்டும்.!



சபை தேவனுடைய மந்தை. 

தேவனுடைய மந்தையில், தேவனுடைய சபையில் சேர்க்கப்படும்போது நமக்கு அவர் கிருபை அளிக்கிறார். நமக்காக அவர் மரித்தார் என்பதை நாம் உணர்ந்து நாம் முழுமையான கீழ்ப்படிதலுக்குள் வளருவதற்காக  நம்முடைய பாவங்களை அவர் மன்னித்து கொண்டே இருக்கிறார். 

அவர் கீழ்ப்படிந்து உருவாக்கிய இந்த சபை, நாமும் கீழ்ப்படிந்துதான் தேவனிடம் எதையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்துகிறது. 

மேலும், அவர் கீழ்ப்படிந்து உருவாக்கிய இந்த சபையை, கிருபையை நாம் எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் முடிவெடுத்து கொள்ள வேண்டும். 

பிரதான மேய்ப்பனாகிய அவர் வரும்போது சபையை நியாயம் தீர்க்கும்போது அதன் பலனை நாம் அடைவோம் அல்லவா?



முடிவாக உணருவோம்.

இயேசு கிறிஸ்து பிறந்திராவிட்டால் நமக்கான இழப்பு பெரியது.!

1.நாம் மரித்ததும் நமக்கான முடிவு நரகம் மட்டுமே இருந்திருக்கும். நாம் மரித்ததும் நாம் செல்வது நரகம்தான் வேறு முடிவு (OPTION) இருந்திருக்காது. 

அவர் மரணத்தின் மூலம், அந்த தண்டனையை அவர் ஏற்று நமக்கு இன்னொரு முடிவை, இன்னொரு வாழ்வை, இன்னொரு OPTION பெற்று தந்திருக்கிறார். அது நித்திய ஜீவன். அதை நாம் தேர்ந்தெடுப்பது நம்முடைய கீழ்ப்படித்தலில் இருக்கிறது.!

2. அவர் கீழ்ப்படிந்து, நாம் நீதிமான்களாக்கப் பட்டிருப்பதால் நமக்கு சபை என்னும் ஆயத்த ஸ்தலம் திறந்திருக்கிறது.!

அவர் நமக்காக கீழ்ப்படிந்திராவிட்டால், நாம் இப்போது சபைக்குள் சேர்க்கப்பட்டு உண்மையான நீதிமானாகுவதற்கான கிருபையை பெற்றிருக்க மாட்டோம்.

இப்போது, நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களும்படிக்கு நம்மை  ஆயத்தம் படுத்தும் ஸ்தலமாக  சபை இருக்கிறது. இங்கே நமக்கான கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

நமக்கு கிடைத்த இந்த இன்னொரு ஓட்டத்தில், இன்னொரு வாய்ப்பில், இந்த கிருபையின் காலத்தில், உயிருள்ள நாட்களில், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னரும், நாம் நீதிமான் என்கிற பெயரில் நாம் இறுதிவரை பாவம் செய்பவர்களாகவே இருந்தோமானால், கிருபையை போக்கடித்தோமானால்,

பிரதான ஆசாரியன் வரும்போது, சபை எடுத்துக்கொள்ளப்படும்போது நாம் தேவனால் கைவிடப்படுவோம். 

அப்போது, நமக்கு இன்னொரு இரட்சிப்பு  இல்லை,.! இன்னொரு மீட்பர் வருவதே இல்லை.! நம் முடிவு நம் கையில்.!

ஆகவே, சபை செல்வது முக்கியம், சபைக்கு கீழ்ப்படிதல் முக்கியம். சபையின் நோக்கம் பரலோகம் என்பது அறிவது மிக முக்கியம்.!


எபிரெயர் 10:25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

26. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

சபையின் முக்கியத்துவத்தை பற்றி வருகின்ற வாரங்களில் இன்னும் விரிவாக நாம்  பார்க்கலாம்....


தேவ ஆவியானவர்தாமே உங்களை வழிநடத்துவாராக. ஆமென்.!



@ஐசக்கிறிஸ்டியன்

எழுந்து கட்டுவோம் கிராம எழுப்புதல் பணி
திருநெல்வேலி-தமிழ்நாடு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிறிஸ்தவ வாழ்வின் அடுத்த அத்தியாயம்