கிறிஸ்தவ வாழ்வின் அடுத்த அத்தியாயம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்த வார சபை தியானம்
SUNDAY

கிறிஸ்தவ வாழ்வின் அடுத்த அத்தியாயம்
தலைப்பு :
வாசலை தாண்டி உள்ளே செல்லுதல்.
(பிரவேசித்தல்)
தேவனுடன் நம் உறவை
வளர்த்துக்கொள்ளுதலுக்கான அவசியம்.
கிறிஸ்துவிற்குள் பிரியமானவர்களே..!
இன்று நான் ஒரு புதிய விளக்கத்துடன் மேடையில் நின்றேன். நான் எடுத்தது ஒன்று, பேசியது வேறொன்று. ஆனால் அது எனக்கும், சபைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நமக்கான அடுத்த அத்தியாயத்தை குறித்து இந்த நாள் பேச வைத்தது.
நாம் ஏன் தேவனை நெருங்க வேண்டும்? தேவனுடன் நெருங்குவதற்கான தேவை என்ன? தேவனுடன் நெருங்கினால் என்ன கிடைக்கும்? தேவனுடன் நெருங்குவது எப்படி? தேவனுடைய உறவில் அடுத்த கட்டம் என்ன? என்கிற பல தலைப்புகளை இந்த நாள் துவக்கி வைத்தது. இந்த செய்தியை பதிவு செய்யவும், பகிரவும் விரும்பி இந்த blogger உருவாக்கினேன்.
வாசலை தாண்டி உள்ளே செல்லுதல். (பிரவேசித்தல்)
நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது, அறிவது சரிதான். ஆனால் இயேசு கிறிஸ்துவின் நோக்கங்களையும் நாம் அறிய வேண்டும்.
இயேசு கிறிஸ்து நானே வாசல் என்றார். இயேசு கிறிஸ்து வாசல் எனும்போது வாசலைத்தாண்டி நாம் சேர வேண்டிய இடம் ஒன்று இருக்கிறது அல்லவா?
பிதாவாகிய தேவன் ஓசியா தீர்க்கத்தரிசனத்தில் சொல்லும் போது,
ஓசியா 11:4 மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், - என்கிறார்.
இங்கே பிதா மனிதர்களை அன்பின் கயிறுகளால் இழுத்தேன் எனும்போது, அந்த அன்பின் கயிறு இயேசுதான் எனும்போது நாம் இழுக்கப்படுவது பிதாவினிடத்தில் என்று உணரலாம்.
பிதாவிடம் சேருவது என்பது, பிதாவிடம் ஒட்டுவது, அல்லது பிதாவிடம் உறவாடுவது, பிதாவோடு இணைவது போன்றவை ஆகும்.
வாசலிலேயே தொங்கிக்கொண்டிருத்தல்
ஆனால், பெரும்பாலும் நாம் இன்னமும் வாசலில்தான் தொங்கி கொண்டிருக்கிறோம். பஸ்ஸில் பயணம் செய்யும் போது சிலரை பார்த்திருக்க முடியும். வாசலிலேயே தொங்கி கொண்டு வருவார்கள். ஒவ்வொரு ஸ்டாப் வரும் போதும் இறங்கி, பின் ஏறுவார்கள்.
கண்டக்டர் அங்கு வரும்போது, வாசல்லே நிற்குறியேப்பா தம்பி, இறங்க போறியா அல்லது மேல ஏறப்போறியா? என்பார்.
ஆம் வாசலில் நிற்பவர் நிலையற்றவர்களாக இருப்பர்.வாசலில் நிற்பவர்களுக்கு ஸ்திரத்தன்மை இருக்காது. வாசல் என்பது இடைப்பட்ட இடம். அப்படித்தான் இன்று கிறிஸ்தவ வாழ்க்கையில் பலர் இருக்கிறார்கள். இரண்டு வாரம் சபைக்கு வருவார்கள் இரண்டு வாரம் சபைக்கு வருவதில்லை.
கிறிஸ்தவ வாழ்க்கையில் சிறிது காலம் இருப்பார்கள் பின்னர் பின்வாங்கி விடுகிறார்கள்.
இறங்கி, பின் ஏறுவார்கள். பின்பு ஒரேயடியாக பின்வாங்கி விடுவார்கள்.
அவர்கள் இயேசு என்னும் வாசலிலேயே தொங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த வாசல் திறந்த வாசலாய் இருப்பதால், அந்த வாசல் எப்போதும் தங்களை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறார்கள். ஆனால் அந்த வாசலும் கூட கிருபையின் காலம் வரைக்கும்தான் திறந்திருக்கும்.
வாசலையே பிடித்துக்கொண்டிருந்தால் சில நேரம் உலகத்தில் உள்ள காரியங்கள் கூட நம்மை வாசலில் இருந்து விழத்தள்ளும். மேலும், வாசலில் இருப்பவர்களுக்குத்தான் உலகத்தை குறித்த பயமும் வரும்.
இன்னும், சிலர் வாசலிலே தொங்கி பயணித்து, வாசலிலேயே இறங்கிவிட்டு கிறிஸ்தவத்திற்கு சென்றாலும் மனநிம்மதி இல்லை என்று வாசலிலேயே முடிவு செய்துவிடுகிறார்கள்.
காரணம், அவர்கள் வாசலுக்குப்பின் இன்னும் ஒரு ஆவிக்குரிய வாழ்வு இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்.
இங்கே, நீங்களும் கிறிஸ்துவை நன்கு அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் பயணம் செய்வதும் கிறிஸ்துவோடுதான்.
ஆனால் அந்த பயணத்தில் வாசலை தாண்டி உள்ளே சென்று விட்டீர்களா? என்பதை பகுத்தறிய வேண்டும்.
இல்லையேல் நாம் உலகத்தின் இச்சைகளுக்கும், உலகத்தின் பயங்கரத்திற்கும் பலியாக வேண்டியதிருக்கும்.
பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுதல்
இயேசு கிறிஸ்து சொல்லும்போது சொல்கிறார்.
மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
இங்கே, இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்தின் படி செய்யவே நம்மை அழைக்கிறார். பிதாவின் சித்தத்தை நாம் எப்படி உணருவது.?. அதற்கு நாம் இயேசு கிறிஸ்து என்னும் வாசல்படியில் உள்ளேறி செல்ல வேண்டும்.
பைபிளை பாருங்கள் பழைய ஏற்பாடு, மற்றும் புதிய ஏற்பாடு என்ற இரண்டு புத்தகங்கள் உண்டு. பலர் இதை தவறாக கையாளுகிறார்கள்.
பழைய ஏற்பாடு பழையது என்றும், புதிய ஏற்பாடு புதியது என்றும், இப்போது நமக்கு தேவை புதியதுதான் என்கிறார்கள். இன்று இந்த கிருபையின் சத்தியம் பெருகிவிட்டது.
இங்கே, ஒன்றை நாம் அறிய வேண்டும் புதிய ஏற்பாடு இயேசுகிறிஸ்துவின் வாசல் என்றால் பழைய ஏற்பாடுதான் பிதாவின் சித்தம். மீண்டும் நாம் புதிய ஆதாமின் மூலம் புதிய ஏதேனில்தான் வசிக்க இருக்கிறோம்.
ஆகவே, நாம் புதிய ஏற்பாட்டின் கிருபையின் மக்களாய் இருந்தாலும் பரலோக ராஜ்யம் செல்வதற்கு நாம் பழைய ஏற்பாட்டின் தேவசித்தத்தை நிறைவேற்றுபவர்களாக நம்மை மெருகேற்றி கொள்ள வேண்டும்.
இதை, புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்க முடியும்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
இங்கே, நாம் கிருபையின் மக்கள்தான் என்றாலும் பரலோக ராஜ்யத்தை அடைவதற்கான Quality யை அல்லது தகுதியை புதிய ஏற்பாடு மாற்றவில்லை. பரிசுத்தமில்லாமல் பரலோக ராஜ்யத்தை அடைய முடியாது என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக்குகிறது.
இன்று பல கிறிஸ்தவ கிருபையின் போதனைகள் நம்மை தவறான பாதைக்கு வழிநடத்துகின்றன. பாவம் இருந்தாலும் பரலோகிராஜ்யத்திற்குள் செல்ல முடியும் என்கிறது.
ஒன்றை தெளிவாக்கி கொள்ள வேண்டும். நாம் புதிய கிருபையின் வாசலின் வழியே பழைய மற்றும் ஆதி தேவனுடைய சித்ததிற்கு அழைத்து செல்லப்படுகிறோம்.
அதாவது புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்துவால் நாம் பழைய ஏற்பாட்டிற்கு அழைத்து செல்லப்படுகிறோம்.
பிதாவின் கோபாக்கினை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு மறைக்கப்படுகிறது. நமக்கு பிதாவை நெருங்கும் நீதி இல்லை. ஆனால் அந்த நீதி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கொடுக்கப்படுகிறது.
இன்று சாதிக்கு ஒரு கோட்டா (இட ஒதுக்கீடு) அரசாங்கத்தில் உண்டல்லவா?
அதுபோன்று புறசாதிகளாகிய நாம் இயேசு கிறிஸ்துவின் "கோட்டாவால்" அந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பிதாவினிடத்திற்கு சேர்க்கப்படுகிறோம்.
அதன்பின்பு நாம் பிதாவின் சித்தத்திற்கு பழக்கப்பட வேண்டும். பக்குவப்பட வேண்டும்.
அதன்பின்பு நாம் தவறிழைப்பவர்களாக இருக்க கூடாது. இருந்தால் மனம்திரும்ப வேண்டும். ஏனெனில், தவறிழைப்பவர்களாக பரலோக ராஜ்யத்திற்கு செல்ல முடியாது.
அதற்கு நம்மை சரி செய்வதற்குதான் சபை இருக்கிறது.வாரவாரம் சபை நமக்காக திறந்திருக்கிறது.
கிருபையின் காலம்
நாம் மனந்திரும்புவதற்கான கால அவகாசம் நம் உயிருள்ள வரை இருப்பதால்தான், அந்த காலத்தில் நம் பாவத்திற்கான மன்னிப்பின் எல்லை எல்லையற்று இருப்பதனால்தான் இந்த காலத்தை நாம் கிருபையின் காலம் என்கிறோம்.
ஆகையால், மற்ற எல்லா காலத்திலும் வாழ்ந்தவர்களை விட நாம் பாக்கியவான்களாக அறியப்படுகிறோம்.
அதேபோல, இந்த கிருபையின் காலத்தையும் நாம் சரியாக பயன்படுத்த தெரியாதவர்களாக இருந்தோமென்றால் நம்மை விட மோசமான முடிவுள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது.
இங்கே, நாம் இந்த கிருபையோடே, வாசலை கடந்து உள்ளேறுபவர்களாக மாற வேண்டும். அதுதான் ஆவிக்குரிய வளர்ச்சி.
யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
இங்கே, இயேசு கிறிஸ்து சொல்லும் போது கூட, நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசிக்கும் போதுதான் இரட்சிக்கப்பட முடியும், மேய்ச்சலைக் கண்டடைய முடியும் என்கிறார்.
"என்னோடு இருங்கள்" என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை, ஒரு பேருந்து நடத்துனர் சொல்வதுபோல, "உள்ளே போங்கள், உள்ளே போங்கள்" என்று நம்மோடு சொல்கிறார். நம்மை அவருக்குள் உட்பிரவேசிக்க சொல்கிறார்.
பரிசுத்த ஆவியானவரின் பாதுகாப்பு
நாம் வாசலை கடந்து உள்ளேறும் போது என்ன நடக்கிறது?
இயேசுவை கடந்து நாம் பரிசுத்த ஆவியானவரின் வசம் ஒப்படைக்கப்படுகிறோம்.!
அங்கு, பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துபவராக, நமக்கான தேற்றரவாளராக, நமக்காக தேவனிடம் வேண்டுபவராக, நல்ல போதகராக நம்மோடு இணைகிறார்.
ரோமர் 8:26. அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
இங்கு பல சபைகளில் அந்நியபாஷை பேசுவதுதான் பரிசுத்த ஆவியானவரை பெற்றதற்கான அடையாளம் என்று தவறாக போதிக்கப்படுகிறது. அந்நியபாஷை ஒரு வரம்.
நாம் பரிசுத்த ஆவியானவரின் எல்லைக்குள் சென்ற பின்பு, தேவன் நம்மை வழி நடத்துவதை நன்கு உணர முடியும். தேவன் நம்மோடு பேசுவதை தெளிவாக அறியமுடியும். நாம் தரிசனங்களை காணலாம். தரிசனங்களின் அர்த்தங்களை எளிதாக பெறலாம்.
இன்னும் நாம் பரிசுத்த ஆவியானவருக்குள் வளரும் போது அநேக ஆவிக்குரிய வரங்களை பெற்று கொள்ள முடியும்.
வரங்களைவிட, தேவனுக்கும் நமக்குமான உறவு செல்போனுக்கு 5G Network கிடைத்தது போன்று சிக்கலில்லாமல் இருக்கும்.😄
தேவனுடைய சத்தம் நம்முடைய உள்ளத்தில் தெளிவாக பிரதிபலிக்கும்.
இந்த தொடர்பு இல்லாமல்தான் நாம் தினமும் சில கிறிஸ்தவ கிளிகளை வைத்து கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் பிரபல ஊழியர்களின் ஸ்தாபனங்கள் தினமும் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை கொத்தி 🐦அதை வாட்சப் ஸ்டேட்டஸில் வெளியிட அதை எடுத்து அன்றைய நாளுக்குரிய ஒன்றாக நாமும் நம் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்கிறோம். அந்த வசனங்கள் மூலமாய் தேவன் நம்மோடு பேசுபவராக நினைக்கிறோம்.
இன்று கிறிஸ்தவர்களின் வாட்சப் ஸ்டேட்டஸ்களில் இந்த குறிப்பிட்ட ஊழியர்களின் LOGO வசனங்களை அடுக்கடுக்காக பார்க்க முடியும். அதேபோல, நாம் தினமும் ஆறுதலின் வீடியோக்களை நாம் தேடி தேடி வைக்கிறோம்.
ஆனால், முழுபைபிளும் நம் கைகளிலில்தான் இருக்கிறது.
ஏன் நம்மால் ஒரு வசனத்தை நமக்கு எடுக்க முடியவில்லை.?
நாம் தேவனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்வோமானால் நாம் இன்றைய நாளுக்கான வாக்குத்தத்ததை யாரிடமும் எதிர்பார்க்க தேவை இல்லை.
மாத மாதம் வாக்குத்தத்த வசனங்களுக்காய் பெரிய கூடாரங்களை தேடி வாக்குத்தத்த கூட்டங்களுக்கு செல்ல தேவை இல்லை.
ஆனால், நாம் தேவனோடு தொடர்பு கொள்ள நினைப்பதை விட அந்த சில ஊழிய நிறுவனங்களோடு, பிரபல ஊழியர்களோடு நெருங்கி இருப்பதை பெருமிதமாக நினைக்கிறோம்.
கேட்டால், தேவன் அவரோடு பேசுகிறார் பிரதர் என்கிறோம்.. சரி, நீங்கள் எப்போது தேவனோடு பேச போகிறீர்கள்.? உங்களுக்கு தேவன் வேற்றாளா?
இங்கே, நாம் தேவனோடு நெருங்கி செல்வோமானால், தேவனோடு நிரந்தர தொடர்பு ஏற்படுத்திக்கொள்வோமானால் நாம் தேவனாலே வழி நடத்தப்படுவோம்.
நாம் தேவனாலே வழி நடத்தப்படுவோமானால், நாம் நம்முடைய வழிகளில் பயமில்லாமல் நடப்போம்.!
தேவ ஆவியானவர்தாமே உங்களை வழிநடத்துவாராக. ஆமென்.!
@ஐசக்கிறிஸ்டியன்
எழுந்து கட்டுவோம் கிராம எழுப்புதல் பணி
திருநெல்வேலி-தமிழ்நாடு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
2.கிறிஸ்தவ வாழ்வின் அடுத்த அத்தியாயம் - SUNDAY 19.10.2025
தலைப்பு : வாசலின் உள்ளே சபை என்னும் சுதந்திரம் ( தேவனுக்கு நாம் கீழ்ப்படிவதற்கான அவகாசம்) முந்தைய பதிவை பார்க்க இங்கே தொடவும் PART 1 கிறிஸ்துவிற்குள் பிரியமானவர்களே..! சென்ற வாரத்தில் நாம் வாசலின் உள்ளே பிரவேசியுங்கள் என்கிற தலைப்பில் சில சத்தியங்களை பார்த்திருந்தோம். மனிதன் கீழ்ப்படியாமல் போனபின்பு தேவனுக்கும் நமக்குமான உறவு தடைபட்டது. பரலோகம் நம்மிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. தேவனுக்கும் நமக்குமான உறவின் வாசல் அடைக்கப்பட்டது. அதை நாம் ஆதியாகமத்தில் பார்க்கிறோம். ஆதியாகமம் 1:23. ... தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 24. அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ..... ஆனால், இயேசு கிறிஸ்து நிமித்தம் அந்த உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவே நமக்கும் தேவனுக்குமான புதிய வாசலை உருவாக்குகிறார். அவரே அந்த வாசல் . (யோவான் 10:9 நானே வாசல்,.) அந்த வாசலுக்குள் செல்லும் போது நாம் பரிசுத்த ஆவியானவ...
கருத்துகள்
கருத்துரையிடுக